Tuesday, November 18, 2008

சிறப்புச் சிறுகதை: மனமென்ற கோவில்!


================================================================
அடியேன் எழுதி ஒரு மாத இதழில் வெளிவந்து பலரது பாராட்டையும் பெற்ற சிறுகதை.
தமிழ்மண வாசகர்களும் படித்து மகிழ அதை இங்கே இன்று பதிவிடுகிறேன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சிறுகதை: மனமென்ற கோவில்!
-----------------------------------------------------------------------------------------
தீபாவளிக்கு இன்னும் நான்கு நாட்களே இருந்தன!

பேரன் பேத்திகளின் வாழ்த்து அட்டைகளுக்குப் பதில் எழுதி முடித்த சின்னைய்யா
செட்டியார், முகப்பில் இருந்து உள் கட்டிற்குள் வந்த தன் அண்ணன் மனைவி
மெய்யம்மை ஆச்சி அவர்களுடன் பேச ஆரம்பித்தார்.

பெரிய வீட்டில் சரிபாதி பங்கு ஆச்சிக்கு. மீதியில் அவருக்கும், அவருடைய
தம்பிக்கும் பங்கு.

"என்ன அண்ணமிண்டி தீபாவளி எல்லாம் வந்திருச்சா?"

ஆச்சி சோழியமாகப் பேசுவார்கள். கேட்பவர்களுக்கு நகைச்சுவையாக
இருக்கும்.

"அதெப்படி வரும்? நமக்கெல்லாம் அதுவாக வருமா? நாமதான போய்க் கூட்டிக்கிட்டு
வரணும்?" என்று ஆச்சி அவர்கள் பதில் சொன்னவுடன், அவர் விடவில்லை மேலும்
தொடர்ந்து பேசினார்.

"கல்லுக்கட்டியிலதான நிக்கும் அண்ணமிண்டி, நீங்கபோய்க் கூப்பிட வேண்டியதுதானே?"

"அதெல்லாம் அந்தக் காலம் மாதிரியா? காரு வண்டி வச்சிருக்கவுக கூப்பிட்டா
இசைஞ்சு வரும்! நாம தனியாளா நடந்துபோயிக்கூப்பிட்டா என்ன மரியாதை இருக்கும்?
அதுவா வரட்டும்னு விட்டுவிட்டேன்" என்று சொல்லிக் கொண்டே முற்றத்தில் இறங்கி
நடுவாசலைக் கடந்து இரண்டாம் கட்டிற்குள் ஆச்சி நுழைந்து விட்டார்கள்.

பேச்சு தடைப் பட்டுவிட்டது.

வெளியே சென்று, கொப்புடை அம்மனைக் கும்பிட்டுவிட்டு, சுப்பையா நாடார் கடையில்
மளிகைச் சாமான்களுக்கான சீட்டைக் கொடுத்துவிட்டு வீட்டிற்குத் திரும்பி வந்த ஆச்சி,
காலைச் சிற்றுண்டியை முடிப்போம் என்று அடுக்களையில் நுழைந்து, தடுக்கை எடுத்துப்
போட்டு உட்கார்ந்தார்கள்.

தோட்டத்தில் குடியிருக்கும் சைவ வீட்டு அம்மாளின் மகள் சாவித்திரி, ஆச்சி வந்து
விட்டதை உணர்ந்து, ஓடி வந்து ஆச்சிக்கு இலையைப் போட்டு, பலகாரத்தை எடுத்துப்
பரிமாற ஆரம்பித்தாள். பலகாரம் என்ன நாலுவகைப் பலகாரமா? அதெல்லாம் அந்தக்
காலம். இப்போது இட்டலி, வரமிளகாய்ச் சட்டினி அல்லது தேங்காய்ச் சட்டினிதான்
காலைப் பலகாரம்.

ஆச்சி சின்னாளப்பட்டு சேலைதான் வீட்டிற்குக் கட்டிக் கொள்வார்கள். மதுரையில்
இருக்கும் மகள் தெற்குவெளி வீதியில் இருக்கும் மொத்தவிலைக் கடையில் வருடத்திற்கு
ஒருமுறை பத்துப் புடவைகளை வாங்கிவந்து கொடுத்துவிடுவாள்.

அதில் தனக்குப் பிடித்த மெஜந்தா கலர் புடவையை, ஆச்சி தீபாவளிக்கென்று எடுத்து
வைத்திருந்தார்கள் சைவ வீட்டுப் பெண்ணிற்கு ஆச்சி தையல் இயந்திரம் ஒன்றை
வாங்கிக் கொடுத்திருந்தார்கள். அந்தப் பெண் வேண்டிய அளவிற்கும் அதிகமான
எண்ணிக்கையில் ரவிக்கைகளைத் தைத்துக் கொடுத்திருந்தாள். ஆகவே ஆச்சிக்கு
தீபாவளி வீட்டுக்குள்ளேயே இருந்தது.

மகனும், பேத்திகளும் வந்தால், தீபாவளி கலகலப்பாக இருக்கும். எங்கே வரப்போகிறார்கள்?

+++++++++++++++++++++++++++++++++++++++++++

பல கஷ்டங்களை அனுபவித்துப் பாடுபட்டு இருபது வருட காலம் ஒரு தாய் வளர்க்கும்
மகனை, இரண்டே மாதங்களில் வருகின்ற மருமகள் வளைத்துப் போட்டு விடுகிறாள்
என்பது ஆச்சியின் தீராத குறை. பல வீடுகளில் பார்த்த அனுபவம் மட்டுமல்ல, ஆச்சியின்
சொந்த அனுபவமும் அதுதான்.

ஆச்சிக்கு அறுபத்தைந்து வயது. செட்டியார், அதாவது ஆச்சியின் கணவர் சிதம்பரம்
செட்டியார் சிவபதவி யடைந்து பத்து வருடம் ஆகிவிட்டது. செட்டியார் இறந்து ஒருவருடம்
கழித்து, மகன் வீட்டில் போய் இருக்கலாம் என்று நினைத்த ஆச்சியின் நினைப்பில்
மண்ணை அள்ளிப்போட்டுவிட்டாள் மருமகள். மருமகளை மட்டும் குறைசொல்வதில்
பயனில்லை! மகனும் அதற்கு உடந்தை!

பி.காம் படிப்பை வைத்துக் கொண்டு குப்பை கொட்ட முடியாது என்று மகன் சொன்ன
போது, அவனை எம்.காம் படிக்கவைத்தது ஆச்சிதான். அவன் விரும்பியபடியே திருச்சி
செயின்ட் ஜோசப் கல்லூரியிலேயே படிக்க வைத்தார்கள். அவன் படித்து முடித்தவுடன்
ஆளைப் பிடித்து தனியார் வங்கியில் வேலையும் வாங்கிக் கொடுத்தர்கள். அது இன்று
அரசு வங்கியுடன் இணைந்து பெரிய வங்கியாகி விட்டது. சம்பளமும் நன்றாக வருகிறது.
வேலைக்குச் சேர்ந்தவுடன் அவன் நோக்கப்படியே பார்வையான தோற்றமுடைய
பெண்னையும் மணம் செய்துவைத்ததுடன், நான்கு பெண்களுடன் ஒற்றை ஆளாகப்
பிறந்தவன். அவனுக்கு ஒன்று மில்லாமல் போய்விடக்கூடாது என்று, சென்னை
வளசரவாக்கத்தில் ஒரு வீட்டு மனை வாங்கு வதற்குப் பணமும் கொடுத்தார்கள்.

அதையெல்லாம் அவன் நினைக்கவில்லை. அதுதான் சோகம்.

காசு காசென்று பணத்தைத் தவிர வேறெதிலும் அக்கறையில்லாதவன் அவன்.
என்னத்தைக் கட்டி, என்னத்தைக் கொண்டு போகப்போகிறானோ அவன்!

ஒருமுறை, தாயாரின் மாத செலவுக்கு ஐநூறு என்று அவனே கணக்குப் பண்ணி,
இரண்டாயிரம் ரூபாயைக் கையில் கொடுத்தபோது ஆச்சி கோபமாகச் சொல்லி
விட்டார்கள்," உன் பணம் எனக்கு வேண்டாம். எங்கள் அப்பச்சிக்கு நான் ஒற்றை
மகளாகப் பிறந்தேன். அவர் கொடுத்து விட்டுப்போனது இன்னமும் இருக்கு. என்
ஆயுசுக்கும் அது போதும்."

அவன், தன் மனைவியைப் பின்னால் நிறுத்திக் கொண்டு தனக்குப் பணம் கொடுத்ததில்
ஆச்சிக்கு மகா கோபம்.

"இல்லை ஆத்தா! வைத்துக்கொள்ளுங்கள்!" என்று அவன் வலியுறுத்திச்சொல்லி
வைத்துவிட்டு எழுந்தபோது, ஆச்சி கோபமாகச் சொல்லிவிட்டார்கள்." பணம் வேண்டாம்
என்றால் வேண்டாம். வைத்துவிட்டுபோனால் அதைக் கொண்டுபோய்க் கொப்புடையம்மன்
கோவில் உண்டியலில் போட்டுவிடுவேன்."

செவிட்டில் அறைந்ததைப் போல் ஆகிவிட்டது. பணத்தை எடுத்துக் கொண்டு போய்
விட்டான். மருமகள் ஒன்றும் தெரியாதவள் மாதிரி பூனைக்குட்டியைப்போல பின்னால்
போய்விட்டாள்.

இது நடந்து எட்டு வருடம் இருக்கும்.

ஆச்சிக்கு அம்மன் சன்னதியருகே உள்ள கட்டிடத்தில் இருந்து மாத வாடகை
மூவாயிரம் ரூபாய் வருகிறது. அந்தக் கட்டடம், ஆச்சிக்கு அவர் அப்பச்சி எழுதிக்
கொடுத்துவிட்டுப்போன கட்டடம். அதோடு ஊருக்கு வரும்போதெல்லாம் ஆச்சியின்
மகள்கள் ஆளாளுக்கு இரண்டாயிரம், நாலாயிரம் என்று கொடுத்துவிட்டுப் போவார்கள்.
ஆச்சி தன்னுடைய துணைக்காக தோட்டத்தில் ஒரு சைவ வீட்டுக்குடும்பத்தையும்,
முகப்பில் ஒரு பள்ளிக்கூட வாத்தியார் குடுமபத்தையும் குடி வைத்திருந்தார்கள்.
சைவ வீட்டினரிடம் வாடகை வாங்கு வதில்லை. பிரதி உபகாரமாக அவர்கள் வீட்டுப்
பெண்பிள்ளைகள் மூவரும் ஆச்சிக்கு எல்லா வேலைகளையும் பார்த்துக் கொடுத்து
விடுவார்கள். அதோடு ஆச்சிக்குத் துணையாக இரவு நேரங்களில் ஆச்சியுடன்
பெட்டக சாலையில் அந்தப் பிள்ளைகளும் வந்து படுத்துக் கொள்வார்கள்.

மகன் விவகாரத்தைப்பற்றி, ஒருமுறை, கொழுதனார் சின்னய்யா செட்டியார் கிண்டிய
போது, ஆச்சி அவர்கள் பட்டென்று இப்படிச் சென்னார்கள்.

"செடி வைத்தேன், தினமும் தண்ணீர் உற்றி வளர்த்தேன். ஆடு மாடு கடித்துத் தின்று
விடாமல் பார்த்துக் கொண்டேன். இலையில் பூச்சி வந்து பட்டுப்போகாமல் பார்த்துக்
கொண்டேன். செடிஇப்போது பெரிய மரமாகி விட்டது. வருடத்திற்கு ஐநூறு
பழங்களுக்குக் குறையாமல் காய்க்கிறது. எல்லாம் பங்கனபள்ளி மாம்பழம் மாதிரி
பெரிய பெரிய பழங்கள். நானும் உட்கார்ந்து நாலு பழம் சாப்பிடலாம் என்றால், என்
மருமகள் தோசி மட்டை அதற்கு உடன்படவில்லை"

அதாவது மகன் நன்றாக ஆளாகி இன்று கை நிறையச் சம்பாதிக்கிறானாம். அதற்கு
முக்கிய காரணமான தனக்கு மட்டும் எதுவும் லெவிக்கவில்லை என்பார்கள்.

சின்னய்யா செட்டியார் அதற்கும் விடாமல் பதில் சொல்வார்.

"அண்ணமிண்டி! எப்போதுமே மரம் வைப்பவன் ஒருத்தன் பழம் சாப்பிடுபவன் வேறு
ஒருத்த னாகத்தான் இருப்பார்கள். அதுதான் உலக நியதி! நீங்களும் இந்த வீட்டிற்கு
வரும்போது, வேறு ஒருத்தி வளர்த்து வைத்த மரத்தை வைத்துத்தானே குடும்பம் நடத்தத்
துவங்கினீர்கள்?"

"ஆகா, நன்றாகச் சொல்கிறீர்களே? உங்களுக்குத் தெரியாததா? எங்கள் அப்பச்சி
எனக்கு என்ன மாமரத்தையா கட்டி வைத்தார்கள்? காலம் பூராவும் கஷ்டப்படச் சொல்லிக்
கருவேலமரத்தை அல்லவா கட்டி வைத்தார்கள்! நான் வாக்கப்பட்டு வந்த நாள் முதலாய்
எங்க வீட்டுச்செட்டியார் ஒரு நாளாவது சம்பாத்தியமின்னு வேலைக்குப் பொயிருக்கிறாரா?
ஆடினது பூராவும் சீட்டு, தேடினது பூராவும் (சீட்டுப் போடுற) திண்ணை!"

"எங்க பெரியப்பச்சிக்கு எவ்வளவு சொத்து இருந்திச்சு? கண்டியிலே தேயிலைத்
தோட்டம் இருந்திச்சு. கம்பத்துக்கு பக்கத்தில நூறு ஏக்கர் ஏலக்காய் தோட்டம்
இருந்திச்சு. அதோட காரைக்குடியைச் சுத்தி எத்தனை இடம் இருந்திச்சு.நீங்க
கல்யாணமாகி இந்த வீட்டுக்குள்ள மாலையும் கழுத்துமா வந்தபோது எங்க அண்ணன்
ராஜா மாதிரியில்ல இருந்தாரு?"

"ராஜா மாதிரி இருந்தாரு. ஆனா எந்த வேலையும் செய்யாம சீட்டு மட்டுமே ஆடி,
இருந்ததை யெல்லாம் தொலைத்துவிட்டுக் கடைசியில் சிப்பாய் மாதிரியில்ல செத்துப்
போனாரு! குன்றித் தின்றால் குன்றும் கரையுமே. நீங்க வளவுல இருக்கிறவுக என்னைக்
காவது ஒரு வார்த்தை அவரிடம் சொல்லியிருக்கீகளா?"

அதோடு சுருதி இறங்கிப்போகும். சின்னய்யா செட்டியார், பூசி மெழுகின மாதிரிப்
பேசுவார். "எல்லா சொத்துமே சீட்டில கரைஞ்சிதுன்னு சொல்ல முடியாது அண்ணமிண்டி.
நான்கு பெண் பிள்ளைகளை வளர்த்துக் கட்டிகொடுத்திருக்கில்ல!"

"கட்டிக்கொடுத்ததுக்கு நாச்சியா நான் வெள்ளமா எங்க அப்பச்சி வீட்டிலேயிருந்து
கொண்டு வந்தேன். நூறு பவுன் கெட்டிக் கழுத்தீரு ரெண்டு. வைர அட்டிகை நாலு,
பதினைஞ்சு தங்கச்சங்கிலி, ஒரு கொட்டான் நிறைய மோதிரங்கள், தோடுகள், சில்லுண்டிச்
சாமான்கள், என் சீதனப்பணம் பதினைந்து லட்சம்னு எத்தனை சாமான்களைச் சரிபண்ணி
நான் பொம்பிளைப்பிள்ளை களைக் கட்டிக்கூட்டிவிட்டேன்னு அந்தக் கொப்புடை
யம்மனுக்குத்தான் தெரியும்"

ஆச்சியின் கண்கள் கலங்கி விடும்!

ஒரு இச்'சுக்கொட்டிவிட்டு சின்னய்யா பேச்சை நிறுத்தி விடுவார்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆச்சியின் மகன் சாத்தப்பன், தன் மனைவி சவுந்தரத்துடனும், இரண்டு பெண்
பிள்ளைகளுடனும் தீபாவளிக்கு முதல் நாள் காலையில் வந்து விட்டான்.

ஆச்சிக்கே நம்ப முடியாமல் ஆச்சரியமாக இருந்தது. பேத்திகள் இருவரும் ஓடி வந்து
'அப்பத்தா' என்று கட்டிக் கொண்டவுடன் ஆச்சியின் மனம் கரைந்து விட்டது!

முதல் பேத்திக்கு வயது பதினெட்டு. சென்னை எத்திராஜ் கல்லூரியில் படிக்கிறாள்.
சின்னவளுக்கு வயது பதின்மூன்று. ஒன்பதாம் வகுப்பு படிக்கின்றாள்.

பேத்திகள் இருவரும் நன்றாக இருந்தார்கள். மருமகள் சவுந்தரம்தான் செளந்தர்யம்
இல்லாமல் இருந்தாள். தேஞ்சுபோய் இருந்தாள். உடம்பில் இனிப்பு, உப்பு, கசப்பு என்று
எல்லா நோய்களும் பங்கு போட்டுக் குடியிருக்கின்றனவாம்.

மருந்துச் செலவு மட்டும் மாதம் மூவாயிரம் ரூபாய் ஆகிறதாம். மகன் தன்னுடைய
பிரச்சினைகளைச் சுருக்கமாகச் சொன்னான்.

ஆகாமல் இருக்குமா?

பெற்றவள் மேல் அன்பில்லாமல், அவளைக் காயப்போட்டுவிட்டுத் தர்மமில்லாமல்
சேர்க்கிற பணம் இப்படிக் கடைசியில் வைத்தியர் வீட்டில்தான் கரையும். ஆச்சி
மனதிற்குள் நினைத்துக் கொண்டார்கள்.

வந்தவர்களைக் குளிக்கச் சொல்லிவிட்டு, ஆச்சி காலைப் பலகாரத்திற்கு வழிபண்ண
விரைந்தார்கள் பிரிஜ்ஜில் இட்லி மாவு இருக்கிறது. சைவ வீட்டுப்பெண் ஓடிப்போய்,
செல்லையா கடையில் இரண்டு லிட்டர் வடை மாவை வாங்கிக் கொண்டு வந்தாள்.

"இட்லி வடையெல்லாம் சூப்பரரக இருக்கு அப்பத்தா!" என்று பேத்திகள் வாயாராமல்
சொல்லிக் கொண்டே சாப்பிட்டு முடிக்கக் காலைப் பொழுது இனிதாகக் கழிந்தது.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்று மாலை சின்னய்யா செட்டியார் ஆச்சியிடம் மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தார்.

'அண்ணமிண்டி, ஒரு முக்கியமான தாக்கல்!"

"என்ன, சொல்லுங்கள்"

"சாத்தப்பன் உங்களுக்காக பட்டுப் புடவை ஒன்று வாங்கிக் கொண்டு வந்திருக்கிறான்.
கொடுப்பான் மறுக்காமல் வாங்கிக் கொள்ளுங்கள்."

"செட்டியார் காலமானதிலிருந்து நான் பட்டுக் கட்டுவதில்லை. உங்களுக்குத் தெரியாதா?"

"அவன் சந்தோஷத்திற்காக வாங்கிக் கொள்ளுங்கள். வைத்திருந்து பின்னால்
யாருக்காவது கொடுங்கள். தவறில்லை!"

"சரி!"

"அதோடு உங்களுக்குக் கொடுப்பதற்காக ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கமும்
வைத்திருக்கிறான். அதையும் நீங்கள் வாங்கிக் கொள்ள வேண்டும்"

"அது எதற்காக என்று சொன்னானா?"

"சொன்னான். இரண்டு வருடங்களாக அவன் மனைவியைச் சீக்கு பிடிங்கித் தின்கிறதாம்.
இதுவரை இரண்டு லட்ச ரூபாய் செலவாகிவிட்டதாம். நிம்மதியே இல்லையாம். நொந்து
போயிருக்கிறான். இரண்டு இடங்களில் பிரசன்னம் பார்த்தானாம். வீட்டில் குலதெய்வக்
குறை இருக்கிறது. தாயாரின் குறை இருக்கிறது. அதையெல்லாம் சரி பண்ணுங்கள்
என்று உத்தரவு வந்ததாம். அதற்குத்தான் உங்கள் ஆசி வேண்டும். உங்கள் மனம் மகிழ
வேண்டும் என்று கொண்டு வந்திருக்கிறான். இனி வருடா வருடம் முடிந்த அளவு பெரும்
தொகையைத் தருவதாகவும் உள்ளானாம். ஆகவே பெரிய மனது பண்ணி இதை வாங்கிக்
கொள்ளுங்கள். அதோடு வந்தவர்களை ஆசீர்வாதம் பண்ணி அனுப்பிவையுங்கள்!"

"அந்தப் பணத்தை நான் எனக்கு என்று எடுத்துக் கொள்ள மாட்டேன். வேறு ஏதாவது
தர்ம காரியத்திற்குத்தான் பயன் படுத்துவேன்."

"ஆகா, உங்கள் கைக்கு வந்து விட்டால், அது உங்கள் பணம். உங்கள் நோக்கப்படி
நீங்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம்" என்று சின்னய்யா சொல்ல, பேச்சு
அத்துடன் நிறைவு பெற்றது.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தீபாவளி அன்று காலை கலகலப்பாக இருந்தது. ஆச்சி குடும்பத்தினர் மொத்தமும்
அதிகாலை யிலேயே எழுந்து குளித்து முடித்துத் தயாராகி விட்டார்கள். மகன் அத்தனை
புதுத்துணிகளுக்கும் மஞ்சளைத் தொட்டுவைத்துக் கொடுக்க, அனைவரும் இரட்டை
வீட்டிற்குள் விளக்கேற்றி முருகப் பெருமானின் படத்தின் முன் விழுந்து வணங்கிக்
கும்பிட்டு விட்டு புத்தாடைகளை அணிந்து கொண்டார்கள்.

சைவ வீட்டுப் பெண்கள் மூவரும் போட்டி போட்டுக் கொண்டு வேலை செய்ய,
அடுக்களையில் காலைப் பலகாரம் அமர்க்களமாகத் தயாராகிக் கொண்டிருந்தது.

சிவன் கோவிலுக்கும், கொப்புடையம்மன் கோவிலுக்கும் போய் வரவேண்டும். இரண்டும்
ஆச்சியின் வீட்டிலிருந்து நடக்கும் தூரம்தான்.

அப்போதுதான் அது நடந்தது. சாத்தப்பன் உள் வீட்டில் ஆத்தாளை அழைத்து நிற்க
வைத்து, தன் மனைவி பிள்ளைகளுடன், அவர்கள் காலில் விழுந்து வணங்கினான்.

"முதலில் தாய், அப்புறம்தான் தெய்வம்" என்று தன் பிள்ளைகள் இருவருக்கும் அவனே
விளக்கமும் சொல்லிக்கொண்டான். பிறகு ஒரு தட்டில் மஞ்சள் கலர் பட்டுப் புடவை
ஒன்றையும் அதனுடன் புது ஐநூறு ரூபாய் நோட்டுக் கட்டாக ரூபாய் ஐம்பதாயிரத்
தையும் வைத்து, 'ஆத்தா வாங்கிக் கொளுங்கள்" என்று சொல்லிக் கொடுத்தான்.

முகத்தில் எந்த சலனமுமின்றி ஆச்சி அவர்கள் அதை வாங்கிக் கொண்டார்கள்.
அவர்கள் இருக்கும் போதே, அருகில் இருந்த பெட்டகத்தைத் திறந்து பணத்தை
மேல் தட்டில் வைத்தார்கள்.

அதோடு சும்மா இருக்காமல் அதன் உள்ளிருந்த இழு அறையைத் திறந்து, ஒரு ஜோடி
வைரத்தோடை எடுத்து, "இங்கே வா ஆத்தா, இதைப் போட்டுக்கொள்" என்று சொல்லி
மூத்த பேர்த்தியின் கையில் கொடுத்தார்கள்.

தோடு டாலடித்தது. ஒன்றறைக் காரெட் இருக்கும். அத்தனையும் பெல்ஜியம் வைரங்கள்.
பளபளவென்று மின்னின. பேர்த்தியின் கண்கள் அதைவிட மின்னின. அவளுக்கு
அளவில்லாத மகிழ்ச்சி.

அப்பத்தாவின் காலில் விழுந்து கும்பிட்டவள். அதைத் தன் பெற்றோர்களிடம் காட்டி
மகிழ ஆரம்பித்த தோடு, தன் காதில் அவற்றைப் போட்டுக் கொள்ளும் முனைப்பில் இருந்தாள்

ஆச்சி தன் சின்னப் பேர்த்தியைப் பார்த்தார்கள். அவள் தன் சகோதரியின் கையில்
இருக்கும் தோட்டைப் பார்க்காமல், அப்பத்தாவையே உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

ஆச்சி கண்களாலேயே இங்கே வா'வென்று சொல்ல, அவள் அருகில் போய் நின்றாள்.
ஆச்சி அவளைக் கட்டிப் பிடித்து, உச்சி முகர்ந்து முத்தம் கொடுத்துவிட்டு, அவளுக்கும்
ஜோடி வைரத்தோடை எடுத்துக் கொடுத்தார்கள். அது அளவில் முதலில் கொடுத்ததைவிட
சற்றுச் சிறியது. இவள் வயதிற்கு அது சரியாக இருக்கும். சின்னப் பேர்த்திக்கும்
அளவில்லாத சந்தோசம்.

எப்போதுமே எதிர்பார்க்காமல் கிடைக்கும் பரிசுகளால் மனம் நெகிழ்ந்து விடும்.
சாத்தப்பனும் அவன் மனைவியும் நெகிழ்ந்துபோய் விட்டார்கள்.

அதோடு, உணர்ச்சியின் எல்லையைத்தொட்டுவிட்ட ஆச்சியின் மருமகள் சவுந்தரம்,
ஆச்சியின் கால்களில் விழுந்து அழுக ஆரம்பித்துவிட்டாள்.

"உங்கள் அருமை தெரியாமல் இருந்துவிட்டேன். உங்கள் அன்பிற்கு நான் என்ன
கைமாறு செய்யப் போகிறேன்? நான் ரெம்ப நாள் இருக்கப்போவதில்லை. நோய் வாட்டி
எடுக்கிறது. எனக்கு எதாவது ஆகிவிட்டால் என் இரண்டு பிள்ளைகளையும் நீங்கள்
தான் கரை சேர்க்க வேண்டும்!"

மெய்யம்மை ஆச்சி அவர்கள் யதார்த்தமான குரலில் சொன்னார்கள்."அதெல்லாம்
உனக்கு ஒன்றும் ஆகாது. பெண்ணிற்கு கல்யாணமாகிறவரை தாயின் துணை எவ்வளவு
அவசியம் என்று எனக்குத் தெரியும். புள்ளி வைத்த ஆண்டவன் கோலத்தை முடிக்காமல்
விட மாட்டான். பழநி அப்பன் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வான். நீ தைரியமாக இரு!"

ஆச்சி விபூதி சம்படத்தை எடுத்து, அவளுடைய நெற்றியில் திருநீற்றைப் பூசிவிட அவள்
அமைதி யானாள். அடுத்தடுத்து ஆச்சி வீட்டிற்கு வந்த உறவினர்களின் உரையாடல்களால்
அன்றைய பகல் பொழுது இனிதாகக் கழிந்தது.

அடுத்தடுத்து இரண்டு நாட்கள் போனதே தெரியவில்லை. பேர்த்திகள் இருவரும்
அப்பத்தாவுடன் ஃபெவிகால் போட்டு ஒட்டியதைப்போல ஒட்டிக்கொண்டு விட்டார்கள்.
ஆச்சி மேல்வீட்டு அறையில் உள்ள தன்னுடைய சேகரிப்புக்களில் இருந்து தேக்கினால்
செய்யப்பெற்ற பல்லாங்குழி விளையாடும் கட்டை ஒன்றை எடுத்துக் கொடுத்தர்கள்.
அதில் போட்டு விளையாட நிறைய மஞ்சாளி விதைகள் கடற் சோவிகள் என்று எடுத்துக்
கொடுத்தார்கள். உங்கள் பாட்டைய்யா வாங்கிக் கொண்டு வந்தது என்று சொல்லி எழுபது
வருடங்களுக்கு முந்தைய காலத்துக் கலைப் பொருட்கள் சிலவற்றை எடுத்துக்
கொடுத்தார்கள். ஜார்ஜ் மன்னர் காலத்துக் காசுகள், புதுக்கோட்டை அரசர் காலத்து
அம்மன் சல்லிக் காசுகள் என்று நிறையச் சாமான்களைப் பேர்த்திகளுக்குக்
கொடுத்தார்கள். இருவருக்கும் அளவற்ற மகிழ்ச்சி!

மூன்றாம் நாள் மாலை, வந்தவர்கள் அனைவரும் பிரியா விடை பெற்றுக் கொண்டு
சென்னைக்குப் பயணமாகி விட்டார்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அதற்கு அடுத்த நாள் காலை, கோவிலுக்குப் போய்விட்டு வந்த ஆச்சி, சைவ வீட்டுப்
பெண்ணிடம் சொல்லி, அவளுடைய பெற்றோர்களை அழைத்து வரச் சொன்னார்கள்.

ஆச்சி கூப்பிடுகிறார்கள் என்றவுடன், ஒட்டு மொத்தக் குடும்பமும், பரபரப்புடன்
என்னவோ ஏதோ என்று வந்து விட்டார்கள்.

வந்தவர்களிடம், மகன் கொடுத்த பட்டுச் சேலையையும், ஐம்பதாயிரம் ரொக்கத்தையும்
தட்டில் வைத்துக் கொடுத்த ஆச்சி," உங்கள் பெண்ணிற்கு நல்ல நேரம் வந்துவிட்டது.
ஐம்பதாயிரம் வேண்டும் திருமணத்திற்கு என்று சொன்னீர்கள் அல்லவா? இதோ உள்ளது
பணம். சீக்கிரம் ஒரு நல்ல மாப்பிள்ளையைப் பார்த்து தேதியை வையுங்கள்" என்றார்கள்.

இன்ப அதிர்ச்சி என்பது இதுதாதனா? அவர்கள் அத்தனை பேரும் திகைத்துப்
போய்விட்டார்கள்.

அந்த அம்மையார் அச்சியின் காலில் விழுந்து வணங்கிவிட்டுத் தட்டைக் கையில்
வாங்கிக் கொண்டார்கள். அந்த அம்மையாரின் கணவரும், மூன்று பெண் பிள்ளைகளும்
ஆச்சியை விழுந்து வணங்க முயன்றபோது ஆச்சி தடுத்துவிட்டார்கள்.

"இது தர்மம் செய்ய வேண்டும் என்று கை நீட்டி வாங்கிய பணம். ஒரு பெண்ணிற்கு
திருமணம் செய்து வைப்பதைவிட பெரிய தர்மம் எதுவும் இருப்பதாக எனக்குத் தோன்ற
வில்லை. ஆகவேதான் உங்களுக்குக் கொடுத்தேன்." என்று சொல்லி அவர்களை
அனுப்பி வைத்தார்கள்.

பண்பலை வானொலியில் இருந்து வந்த பாடல் மனதை நிறைத்தது.

"பொருள்கொண்ட பேர்கள் மனம்கொண்டதில்லை
தரும்கைகள் தேடி பொருள் வந்ததில்லை

மனமென்ற கோவில் திறக்கின்ற நேரம்

அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்!'"

இல்லை, தரும்கைகள் தேடி சிலசமயம் பொருள் வருவதுண்டு. வந்தாலும்
அந்தக்கைகள் வந்த பொருளைத்
தனக்காக வைத்துக் கொள்வதில்லை.
மெய்யம்மை ஆச்சியும் அவர்களில் ஒருவர்!


"மனமென்ற கோவில் திறக்கின்ற நேரம் ;
அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்!'
இந்த வரியையும்
அந்தக் கவிஞன் ஆச்சிக்காகத்தான் எழுதினான் போலும்!

================================================

வாழ்க வளமுடன்!

30 comments:

ramachandranusha(உஷா) said...

ஐயா! இப்படிதான் முடியும் என்று யூகிக்க முடிந்தாலும், படித்து முடித்ததும் மனசுக்கு நிறைவாய் இருந்தது. வாழ்த்துக்கள்

வல்லிசிம்ஹன் said...

காரைக்குடிக்குப் போய் ஆச்சியைப் பார்க்க ஆசையாக இருக்கிறது:)

நியாயமான முடிவு.

எடுத்துக் கொடுக்கவும் மனம் வேண்டுமே.\பையனாவது நிம்மதிக்காக அன்னையை நாடினான். அம்மாவோ எதையும் எதிர்பார்க்காமல் சைவக் குடும்பதுக்கு அள்ளிக் கொடுத்தாள். சிறந்தத தானம் நிதானம்.

SP.VR. SUBBIAH said...

//////ramachandranusha(உஷா) said...
ஐயா! இப்படிதான் முடியும் என்று யூகிக்க முடிந்தாலும், படித்து முடித்ததும் மனசுக்கு நிறைவாய் இருந்தது. வாழ்த்துக்கள்////

பெண்ணின் பெருமையை, உயர்வைச் சொல்வதற்காக எழுதப்பெற்ற கதை.
அதைப் பதிவிட்டவுடன் வந்து படித்து முதலில் பின்னூட்டமிட்டவர்கள் இருவருமே
தாய்க்குலத்தவர் என்னும் போது எனக்கும் மகிழ்ச்சிதான் சகோதரி!

SP.VR. SUBBIAH said...

////வல்லிசிம்ஹன் said...
காரைக்குடிக்குப் போய் ஆச்சியைப் பார்க்க ஆசையாக இருக்கிறது:)
நியாயமான முடிவு.
எடுத்துக் கொடுக்கவும் மனம் வேண்டுமே.\பையனாவது நிம்மதிக்காக அன்னையை நாடினான். அம்மாவோ எதையும் எதிர்பார்க்காமல் சைவக் குடும்பதுக்கு அள்ளிக் கொடுத்தாள். சிறந்த தானம் நிதானம்./////

நீங்கள் வந்து படிப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். அதேபோல வந்து உங்களுடைய மன நிறைவை
வெளிப்படுத்தியுள்ளீர்கள் சகோதரி! மிக்க நன்றி!

வேலன். said...

"பொருள்கொண்ட பேர்கள் மனம்கொண்டதில்லை
தரும்கைகள் தேடி பொருள் வந்ததில்லை
மனமென்ற கோவில் திறக்கின்ற நேரம்
அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்!'"
ஐயா, கதை படித்தேன்- கதை படி(தேன்) இறுதி வரி படிக்கையில் என்னை அறியாமல் கண்ணீர் வந்துவிட்டது. அனைவரும் பணம் வைத்திருக்கலாம் ஆனால் அதை தருவதற்கு மனம் ஒன்று வேண்டும்.
பணம் யார்வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். ஆனால் பேறும் புகழும் சம்பாதிக்க இயலாது. என்ன கொண்டு வந்தோம் -கொண்டு செல்வதற்கு? சுனாமி வந்து திருந்தாதர்கள் இன்னும் ஒரு சுனாமி வருவதற்குள்ளாவது திருந்தட்டும்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

SP.VR. SUBBIAH said...

////வேலன். said...
"பொருள்கொண்ட பேர்கள் மனம்கொண்டதில்லை
தரும்கைகள் தேடி பொருள் வந்ததில்லை
மனமென்ற கோவில் திறக்கின்ற நேரம்
அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்!'"
ஐயா, கதை படித்தேன்- கதை படி(தேன்) இறுதி வரி படிக்கையில் என்னை அறியாமல் கண்ணீர் வந்துவிட்டது. அனைவரும் பணம் வைத்திருக்கலாம் ஆனால் அதை தருவதற்கு மனம் ஒன்று வேண்டும்.
பணம் யார்வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். ஆனால் பேரும் புகழும் சம்பாதிக்க இயலாது. என்ன கொண்டு வந்தோம் -கொண்டு செல்வதற்கு? சுனாமி வந்து திருந்தாதர்கள் இன்னும் ஒரு சுனாமி வருவதற்குள்ளாவது திருந்தட்டும்.
வாழ்க வளமுடன்,
வேலன்.//////

நன்றி நண்பரே!

thenkasi said...

புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
கங்கை யமுனை காவிரி வைகை ஓடுவது எதற்காக
நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக


கேள்விக்குறி போல் முதுகு வளைந்து உழைப்பது எதற்காக
மானம் ஒன்றே பெரிதென எண்ணி பிழைக்கும் நமக்காக
(புத்தன் இயேசு )

நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு
பகை வந்தபோது துணை ஒன்று உண்டு
இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு
எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு
உண்மை என்பது என்றும் உள்ளது
தெய்வத்தின் மொழியாகும்
நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும்
(புத்தன் இயேசு )

பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை
மனம் என்ற கோயில் திறக்கின்ற நேரம்
அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்
அழுதவர் சிரித்ததும் சிரிப்பவர் அழுததும்
விதி வழி வந்ததில்லை
ஒருவருக்கென்றே உள்ளதை எல்லாம் இறைவன் தந்ததில்லை
(புத்தன் இயேசு )

சின்ன அம்மிணி said...

வாத்தியார் ஐயா, கதை நல்லா இருந்துது. இந்தக்கதைக்கு இப்படி முடிவு இருந்தாதான் நல்லா இருக்கும்.

ரமணா said...

அருமையான கதை.

சுபமான முடிவு.



கதை சொல்லும் நீதி
போற்றுதற்குரியது


அடுத்த கதை எப்போ?

krish said...

இது கதை என்பதை விட ஒரு நிகழ்ச்சியை பார்ப்பது போல் அனுபவம் ஏற்பட்டது. அருமையான கதை.

SP.VR. SUBBIAH said...

////Blogger thenkasi said..
புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
கங்கை யமுனை காவிரி வைகை ஓடுவது எதற்காக
நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக////

கதையில் உள்ள வரிகள் வரும் அந்த முழுப்பாடலையும்
பின்னூட்டமாகத் தந்தமைக்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

Blogger சின்ன அம்மிணி said...
வாத்தியார் ஐயா, கதை நல்லா இருந்துது. இந்தக்கதைக்கு
இப்படி முடிவு இருந்தாதான் நல்லா இருக்கும்.////

உங்கள் கருத்திற்கு நன்றி சகோதரி!

SP.VR. SUBBIAH said...

/////Blogger ரமணா said...
அருமையான கதை.
சுபமான முடிவு.
கதை சொல்லும் நீதி
போற்றுதற்குரியது////

பாராட்டிற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

/////krish said...
இது கதை என்பதை விட ஒரு நிகழ்ச்சியை பார்ப்பது போல்
அனுபவம் ஏற்பட்டது. அருமையான கதை.////

நன்றி கிரிஷ்!

coolzkarthi said...

வாத்தியாரே ஒரே வரியில்,அருமை, சற்றே மனம் கனத்து விட்டது...

SP.VR. SUBBIAH said...

//////coolzkarthi said...
வாத்தியாரே ஒரே வரியில்,அருமை, சற்றே மனம் கனத்து விட்டது...////

நன்றி கார்த்தி!

நாமக்கல் சிபி said...

கதை அருமையா இருந்தது!

மனசு கனத்துப் போனதும் உண்மை!

திருநெல்வேலி கார்த்திக் said...

காரைக்குடி 1000 ஜன்னல் வீட்டு படங்கள் இருந்தால் மாணவக் கண்மணிகளின் கண்களுக்கு விருந்தாய் - செய்திகளுடன் பல்சுவை பதிவு தாருங்கள்.

பொதுவாய் எல்லாப் பதிவுகளுக்குமே( தமிழ் மணம்)பின்னூட்டங்கள் குறைவதன் காரணம் தெரியவில்லை.

பதிவுகளின் எண்ணிக்கை கூடுவதும் ஒரு காரணமோ

Ramesh said...

The story is excellent. The MANVASANAI has added a feather to the cap. Felt like having watched a Television drama - single episode short story. Can be televised with our Achi Manorama in the lead role.

JUST FANTASTIC.

RAMESHBABU

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//"செடி வைத்தேன், தினமும் தண்ணீர் உற்றி வளர்த்தேன். ஆடு மாடு கடித்துத் தின்று விடாமல் பார்த்துக் கொண்டேன். இலையில் பூச்சி வந்து பட்டுப்போகாமல் பார்த்துக்
கொண்டேன். செடி இப்போது பெரிய மரமாகி விட்டது. வருடத்திற்கு ஐநூறு
பழங்களுக்குக் குறையாமல் காய்க்கிறது. எல்லாம் பங்கனபள்ளி மாம்பழம் மாதிரி பெரிய பெரிய பழங்கள். நானும் உட்கார்ந்து நாலு பழம் சாப்பிடலாம் என்றால், என்
மருமகள் தோசிமட்டை அதற்கு உடன்படவில்லை"//

வாத்தியாரே.. கனத்த மனதுடன் ஆச்சி சொன்ன இந்த வார்த்தைகளுக்குள்தான் எத்தனை, எத்தனை கதைகள் உள்ளன..? அத்தனையும் கண்ணீரையும், உப்பையும் கொட்டித் தீர்த்த கதைகள்..

ஒவ்வொரு வீட்டு அடுப்படியிலும் மெல்லிய அழுகை உண்டு என்பார்கள்.. அது சீமான் வீட்டு அடுப்படி என்றாலும் சரி.. குடிசை வீட்டு அடுப்படி என்றாலும் சரி.. அது ஒன்றுதான்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//"அண்ணமிண்டி! எப்போதுமே மரம் வைப்பவன் ஒருத்தன் பழம் சாப்பிடுபவன் வேறு
ஒருத்தனாகத்தான் இருப்பார்கள். அதுதான் உலக நியதி!//

//எங்கள் அப்பச்சி
எனக்கு என்ன மாமரத்தையா கட்டி வைத்தார்கள்? காலம் பூராவும் கஷ்டப்படச் சொல்லிக்
கருவேல மரத்தை அல்லவா கட்டி வைத்தார்கள்! நான் வாக்கப்பட்டு வந்த நாள் முதலாய்
எங்க வீட்டுச் செட்டியார் ஒரு நாளாவது சம்பாத்தியமின்னு வேலைக்குப் பொயிருக்கிறாரா?
ஆடினது பூராவும் சீட்டு, தேடினது பூராவும் (சீட்டுப் போடுற) திண்ணை!"//

//"ராஜா மாதிரி இருந்தாரு. ஆனா எந்த வேலையும் செய்யாம சீட்டு மட்டுமே ஆடி, இருந்ததையெல்லாம் தொலைத்துவிட்டுக் கடைசியில் சிப்பாய் மாதிரியில்ல செத்துப்
போனாரு! குன்றித் தின்றால் குன்றும் கரையுமே.//

//பெற்றவள் மேல் அன்பில்லாமல், அவளைக் காயப்போட்டுவிட்டுத் தர்மமில்லாமல் சேர்க்கிற பணம் இப்படிக் கடைசியில் வைத்தியர் வீட்டில்தான் கரையும்.//

//"இது தர்மம் செய்ய வேண்டும் என்று கை நீட்டி வாங்கிய பணம். ஒரு பெண்ணிற்கு திருமணம் செய்து வைப்பதைவிட பெரிய தர்மம் எதுவும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.//

வாத்தியாரே.. வார்த்தைகள் அத்தனையும் முத்துக்கள்.. சொக்க வைக்கிறது உங்களது எழுத்து நடை..

ஆச்சியிடம் சொல்லி திருஷ்டி சுற்றிப் போடச் சொல்லுங்கள்..

அமர பாரதி said...

கதை அருமை வாத்தியாரையா. நல்ல முடிவு. டிராஜிடி முடிவாக இருக்கக் கூடாது என்று பயந்து கொண்டே படித்தேன்.

SP.VR. SUBBIAH said...

//////நாமக்கல் சிபி said...
கதை அருமையா இருந்தது!
மனசு கனத்துப் போனதும் உண்மை!////

நன்றி சிபி!

SP.VR. SUBBIAH said...

/////திருநெல்வேலி கார்த்திக் said...
காரைக்குடி 1000 ஜன்னல் வீட்டு படங்கள் இருந்தால் மாணவக் கண்மணிகளின் கண்களுக்கு விருந்தாய் - செய்திகளுடன் பல்சுவை பதிவு தாருங்கள்.////////

முயற்சி செய்கிறேன் நண்பரே!

///////பொதுவாய் எல்லாப் பதிவுகளுக்குமே( தமிழ் மணம்)பின்னூட்டங்கள் குறைவதன் காரணம் தெரியவில்லை.
பதிவுகளின் எண்ணிக்கை கூடுவதும் ஒரு காரணமோ/////

நேரமின்மைதான் முக்கிய காரணம்!

SP.VR. SUBBIAH said...

//////Ramesh said...
The story is excellent. The MANVASANAI has added a feather to the cap. Felt like having watched a Television drama - single episode short story. Can be televised with our Achi Manorama in the lead role.
JUST FANTASTIC.
RAMESHBABU/////

உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

//////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
//"செடி வைத்தேன், தினமும் தண்ணீர் உற்றி வளர்த்தேன். ஆடு மாடு கடித்துத் தின்று விடாமல் பார்த்துக் கொண்டேன். இலையில் பூச்சி வந்து பட்டுப்போகாமல் பார்த்துக்
கொண்டேன். செடி இப்போது பெரிய மரமாகி விட்டது. வருடத்திற்கு ஐநூறு
பழங்களுக்குக் குறையாமல் காய்க்கிறது. எல்லாம் பங்கனபள்ளி மாம்பழம் மாதிரி பெரிய பெரிய பழங்கள். நானும் உட்கார்ந்து நாலு பழம் சாப்பிடலாம் என்றால், என்
மருமகள் தோசிமட்டை அதற்கு உடன்படவில்லை"//

வாத்தியாரே.. கனத்த மனதுடன் ஆச்சி சொன்ன இந்த வார்த்தைகளுக்குள்தான் எத்தனை, எத்தனை கதைகள் உள்ளன..? அத்தனையும் கண்ணீரையும், உப்பையும் கொட்டித் தீர்த்த கதைகள்..
ஒவ்வொரு வீட்டு அடுப்படியிலும் மெல்லிய அழுகை உண்டு என்பார்கள்.. அது சீமான் வீட்டு அடுப்படி என்றாலும் சரி.. குடிசை வீட்டு அடுப்படி என்றாலும் சரி.. அது ஒன்றுதான்..///////

நிதர்சனமான உண்மை தமிழரே!
இதுவரை 50 சிறுகதைகள் எழுதியுள்ளேன். பாதிக்கதைகளுக்கான கருத்துக்கள் கண்ணீரில் கிடைத்தவைதான்!

SP.VR. SUBBIAH said...

///////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
//"அண்ணமிண்டி! எப்போதுமே மரம் வைப்பவன் ஒருத்தன் பழம் சாப்பிடுபவன் வேறு
ஒருத்தனாகத்தான் இருப்பார்கள். அதுதான் உலக நியதி!//

//எங்கள் அப்பச்சி
எனக்கு என்ன மாமரத்தையா கட்டி வைத்தார்கள்? காலம் பூராவும் கஷ்டப்படச் சொல்லிக்
கருவேல மரத்தை அல்லவா கட்டி வைத்தார்கள்! நான் வாக்கப்பட்டு வந்த நாள் முதலாய்
எங்க வீட்டுச் செட்டியார் ஒரு நாளாவது சம்பாத்தியமின்னு வேலைக்குப் பொயிருக்கிறாரா?
ஆடினது பூராவும் சீட்டு, தேடினது பூராவும் (சீட்டுப் போடுற) திண்ணை!"//

//"ராஜா மாதிரி இருந்தாரு. ஆனா எந்த வேலையும் செய்யாம சீட்டு மட்டுமே ஆடி, இருந்ததையெல்லாம் தொலைத்துவிட்டுக் கடைசியில் சிப்பாய் மாதிரியில்ல செத்துப்
போனாரு! குன்றித் தின்றால் குன்றும் கரையுமே.//

//பெற்றவள் மேல் அன்பில்லாமல், அவளைக் காயப்போட்டுவிட்டுத் தர்மமில்லாமல் சேர்க்கிற பணம் இப்படிக் கடைசியில் வைத்தியர் வீட்டில்தான் கரையும்.//

//"இது தர்மம் செய்ய வேண்டும் என்று கை நீட்டி வாங்கிய பணம். ஒரு பெண்ணிற்கு திருமணம் செய்து வைப்பதைவிட பெரிய தர்மம் எதுவும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.//

வாத்தியாரே.. வார்த்தைகள் அத்தனையும் முத்துக்கள்.. சொக்க வைக்கிறது உங்களது எழுத்து நடை..//////

எழுதியவனுக்கு இதைவிடச் சிறந்த பாராட்டு வேறு என்ன வேண்டும் உண்மைத் தமிழரே?
உங்கள் பாராட்டுக்களால் என்னைச் சொக்க வைத்துவிட்டீர்கள்:-))))))

///////ஆச்சியிடம் சொல்லி திருஷ்டி சுற்றிப் போடச் சொல்லுங்கள்..//////

நீங்களும், நானும் பழநி அப்பனின் தீவிர பக்தர்கள்.
திருஷ்டிகளெல்லாம் நம்மை ஒன்றும் செய்யாது!
அவன் கைவேல் பார்த்துக்கொள்ளும்!

SP.VR. SUBBIAH said...

///////அமர பாரதி said...
கதை அருமை வாத்தியாரையா. நல்ல முடிவு. டிராஜிடி முடிவாக இருக்கக் கூடாது என்று பயந்து கொண்டே படித்தேன்./////

இதுவரை 50 சிறுகதைகள் எழுதியுள்ளேன். எல்லாக் கதைகளுக்குமே சுபமாக அதே நேரத்தில் வாசகர் ஒப்புக்கொள்ளும் முடிவைத்தான் தந்திருக்கிறேன். டிராஜிடி எனக்குப் பிடிக்காது - அதுவும் ஒரு காரணம்!

தமாம் பாலா (dammam bala) said...

அற்புதமான கதை ஐயா!

படித்து முடிக்கையில் கண்களிலிருந்து கரகரவென நீர் சுரந்து, கன்னத்தில் வழிவதை தடுக்க முடியவில்லை

வாழ்த்துக்கள்!!

SP.VR. SUBBIAH said...

////தமாம் பாலா (dammam bala) said...
அற்புதமான கதை ஐயா!
படித்து முடிக்கையில் கண்களிலிருந்து கரகரவென நீர் சுரந்து, கன்னத்தில் வழிவதை தடுக்க முடியவில்லை
வாழ்த்துக்கள்!!////

இந்தக் கதையை, இதழில் படித்த வாசகர்களும் அதைத்தான் சொன்னார்கள்.
மனம்கொண்ட பேரைக் காணும் மனித உணர்வுகள் பெரும்பாலும் ஒன்றுதான் என்னும் என்னுடைய எண்ணத்தை உங்கள் கருத்துக்கள் உறுதி செய்கின்றன! நன்றி பாலா!

ஒதுக்கீடு இல்லாமல் ஒரு வகுப்பறை!